சட்டவிரோதமாக செயல்பட்ட பார்கள் 'சீல்' வைப்பு
சட்டவிரோதமாக செயல்பட்ட பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார். திருத்தணி கோட்டத்திற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, கே.ஜி. கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
மொத்தம் உள்ள 22 டாஸ்மாக் கடைகளில் 2 கடைகளுக்கு அருகில் மட்டும் பார் நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதியின்றி பார்கள் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், தாசில்தார் விஜயராணி, வருவாய் ஆய்வாளர் கமல், சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி ஆகியோர் கே.ஜி.கண்டிகை மற்றும் திருத்தணி அரக்கோணம் சாலை அருகே அனுமதியின்றி இயங்கி வந்த 2 பார்களுக்கு சீல் வைத்தனர்.
இதேபோல் பொதட்டூர்பேட்டையில் 3 இடங்களிலும், ஆர்.கே.பேட்டையில் ஒரு இடத்திலும் சீல் வைத்தனர். மேலும் ஸ்ரீகாளிகாபுரம், விளக்கினாம்பூண்டிபுதூர் பகுதிகளில் அரசு பார்கள் அனுமதி புதுப்பிக்காததால் அவற்றுக்கும் வருவாய்த்துறையினர் மூலம் சீல் வைக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள ஆரம்பாக்கம், எளாவூர், தேர்வழி, ரெட்டம்பேடு, சுண்ணாம்புகுளம், பாதிரிவேடு உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகே அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக பார்கள் இயங்கி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 5 பார்களும், சிப்காட் பகுதியில் 6 பார்களும், ஆரம்பாக்கத்தில் 3 பார்களும், கவரைப்பேட்டையில் 4 பார்களும், பாதிரிவேட்டில் ஒரு பார் என கும்மிடிப்பூண்டி தாலுகாவில் அனுமதியின்றி இயங்கி வந்த மொத்தம் 19 பார்களுக்கு போலீசார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேற்கண்ட அனைத்து பார்களும் கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.