நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம்
கூடங்குளம் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம் அடைந்தது. இதில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்;
கூடங்குளம் அருகே நடுக்கடலில் பாறையில் மோதி விசைப்படகு சேதம் அடைந்தது. இதில் இருந்த 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விசைப்படகு
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணிமுத்து. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 1-ந் தேதி 11 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். படகை வினி என்பவர் இயக்கினார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள இடிந்தகரை அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த பாறை மீது விசைப்படகு மோதி அடிப்பகுதி சேதம் அடைந்தது. இதனால் விசைப்படகின் என்ஜின் அறைக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் படகை மேலும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதில் இருந்த 11 மீனவர்களும் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். அந்த படகில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான மீன்களும் இருந்தன.
பத்திரமாக மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த இடிந்தகரை மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த மீனவர்களையும், படகில் இருந்த மீன்களையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பாறையின் இடுக்கில் சிக்கிய விசைப்படகை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் மீட்க முடியவில்லை.
அதே நேரத்தில் படகு உடைந்து சேதம் அடைந்தது. இதனால் படகில் இருந்த பொருட்கள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துக் கொண்ட மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரைக்கு திரும்பினர்.