போதை வாகன ஓட்டியிடம் பேரம்: ரூ.10 ஆயிரம் அபராத தொகைக்கு பதில் ரூ.4 ஆயிரம் கேட்ட போலீஸ்காரர்கள்

சென்னையில் போதை வாகன ஓட்டியிடம் ரூ.10 ஆயிரம் அபராத தொகைக்கு பதிலாக ரூ.4 ஆயிரம் கேட்டு பேரம் பேசிய 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.;

Update: 2023-07-21 08:39 GMT

சென்னை மெரினா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றும் வெங்கடேஷ், யுவராஜ் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மெரினா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தள்ளாடியபடி இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மது போதையை கண்டறியும் 'பிரீத் அனலைசர்' கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் அந்த வாகன ஓட்டி, அதிக மது போதையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளின் சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டு வாகன ஓட்டியிடம் போலீஸ்காரர்கள் 2 பேரும் பேரம் பேசியதாக தெரிகிறது. "ரூ.10 ஆயிரம் அபராத தொகைக்கு பதில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் உங்களை விட்டுவிடுகிறோம்" என்று கூறினர். போதையில் வந்த வாகன ஓட்டி போலீஸ்காரர்கள் 2 பேரும் தன்னிடம் பேரம் பேசியதை செல்போனில் ரகசியமாக 'வீடியோ' எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் ரூ.4 ஆயிரத்தை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் பேரம் பேசிய போலீஸ்காரர்கள் 2 பேரையும் போதை ஆசாமி பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி தான் எடுத்த வீடியோ காட்சியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா விசாரணை நடத்தினார். இதில் 2 போலீஸ்காரர்களும் ரூ.4 ஆயிரம் பேரம் பேசியது உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ்காரர்கள் வெங்கடேஷ், யுவராஜ் ஆகிய 2 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்