சேலத்தில் வக்கீல்கள் சங்க மாநாடு: நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தல்

நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலத்தில் நடந்த வக்கீல்கள் சங்க மாநாட்டில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் வலியுறுத்தினார்.;

Update: 2023-03-11 20:40 GMT

மாநில மாநாடு

சேலத்தில் அகில பாரத வக்கீல்கள் சங்க முதல் மாநில மாநாடு நேற்று நடந்தது. சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் சுந்தரேசன், அகில பாரத ஆதிவக்த பரிஷத் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தொழில்நுட்பங்கள்

வக்கீல் தொழில் என்பது உன்னதமான தொழில் ஆகும். அவற்றை முறையாக செயலாற்ற வேண்டும். சமீப காலமாக சமுதாயத்தில் வக்கீல்கள் மீதான எதிர்பார்ப்புகள் குறைந்து வருகிறது. அதை மீட்க வேண்டும். நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. நீதிமன்றங்களில் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

சட்ட நுணுக்கங்களை, சந்தேகங்களை உடனடியாக தொழில்நுட்பத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதற்கு முன்பு எந்த சந்தேகம் வந்தாலும் சட்ட புத்தகங்களை புரட்டி தான் எடுக்க முடியும். தற்போது லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற தொழில்நுட்பத்தின் மூலம் இளம் வக்கீல்கள் நல்ல சட்டங்களை உடனடியாக தெரிந்து கொள்கிறார்கள்.

காலிப்பணியிடங்கள்

மாவட்ட நீதிபதிகள் வாரத்திற்கு ஒருமுறை அவர்கள் எல்லைக்கு உட்பட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமையில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது, ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தெரிந்து கொண்டு தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 272 நீதிபதிகள் உள்பட 5,649 நீதிமன்ற ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகப்பிரிவினை வழக்கில் கூட 15 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ள நிலை நீடித்து வருகிறது. முதலில் நாம், நமது உடன் பிறந்த சகோதர், சகோதரிகளுக்கு விட்டு கொடுக்க முன்வர வேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேரம் மேலாண்மை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருணை மனு 7 ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்திடமே இருந்தது. உரிய நேரத்தில் முறையான பதில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது 7 பேருக்கும் விடுதலை கிடைத்துள்ளது. வக்கீல்கள், நீதிபதிகள் நேரம் மேலாண்மையை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் நீதிபதி சதாசிவம் பேசினார். நிகழ்ச்சியில் வரவேற்பு கமிட்டி தலைவர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்