அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2022-09-27 06:57 GMT

சென்னை,

கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனைத்தொடர்ந்து 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். கழக உடன் பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறியுள்ளார். கட்டுப்பாடுகளை மீறி கட்சியின் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதால் பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்