உணவகங்களில் 'ஹுக்கா பார்' கூடத்திற்கு தடை - அரசிதழ் வெளியீடு

தமிழகத்தில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) திறக்க தடை விதித்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2023-08-04 04:54 GMT

சென்னை,

சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து ஹுக்கா பார்களுக்கு தடை மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் உணவகங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) திறக்க தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை, ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது:-

புகைக்குழல் கூடத்தினை தடை செய்தல்:- இந்தச் சட்டத்தில் அடங்கியிருப்பது எவ்வாறிருப்பினும், நபர் எவரும், அவருக்குச் சொந்தமாகவோ அல்லது பிற நபர் எவரின் சார்பாகவோ, உணவுக் கூடம் உள்ளடங்கலான எந்த இடத்திலும், புகைக்குழல் கூடம் எதனையும் திறக்கவோ அல்லது நடத்தவோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு புகைக்குழலினை வழங்கவோ கூடாது.

விளக்கம்:- "உணவுக்கூடம்" என்பது உணவு அல்லது சாராயம், மது, கோதுமைச் சாராயம் அல்லது பிற தானியவகையிலான மதுபானங்களை உள்ளடக்காதச் சிற்றுண்டி வகை எதனையும், சாதாரண வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றதும் நுகர்வுக்காக விற்கப்படுகின்றதுமான இடம் எதுவும் என்று பொருள்படும்.

கைப்பற்றுதலுக்கான அதிகாரம்:- மாநில அரசினால் அதிகாரமளிக்கப்பட்ட, உதவி ஆய்வாளர் படிநிலைக்குக் குறையாத, காவல்துறை அலுவலர் எவரும், 4A ஆம் பிரிவின் அந்த வகை முறைகளானவை மீறப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தைக் கொண்டிருந்தால், புகைக்குழல் கூடத்தின் உட்பொருளாகவோ அல்லது துணைப் பொருளாகவோ பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் அல்லது பொருள் எதனையும் அவர் கைப்பற்றலாம்.

புகைக்குழல் கூடத்தினை நடத்துவதற்கான தண்டனை:- வகைமுறைகளை மீறுகிறவர் எவரும், ஓர் ஆண்டிற்கு குறையாத ஆனால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படவாகும் ஒரு காலஅளவிற்கு சிறைத் தண்டனையும் இருபதாயிரம் ரூபாய்க்குக் குறையாத ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படலாகும் அபராதமும் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்