ஊத்துக்கோட்டை அருகே வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் நகை, பணம் தப்பியது

ஊத்துக்கோட்டை அருகே வங்கியின் ஜன்னல் கம்பி உடைத்து கொள்ளையிட முயன்ற நபர் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினார். இதனால் நகைகள் மற்றும் பணம் தப்பியது.;

Update: 2023-10-19 08:31 GMT

ஊத்துக்கோட்டை அடுத்துள்ள பாலவாக்கம் பகுதியில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 1000-க்கும் மேற்பட்டோர் சேமிப்பு மற்றும் நகை கடன் கணக்கு வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்ததும் ஊழியர்கள் வழக்கம் போல் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றான். பின்னர் அங்கிருந்து லாக்கரை உடைக்க முயன்றபோது ஒலி எழுந்தது. உடனே அந்த நபர் கொள்ளை திட்டத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டான்.

இதற்கிடையே நேற்று காலையில் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது ஜன்னல் கம்பி உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் லாக்கரை உடைக்க முயன்றது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து வங்கி மேலாளர் வைத்தியநாதன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடி வருகிறார்கள். கொள்ளையனின் திட்டம் தோல்வியில் முடிந்ததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகைகள் தப்பியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் நேற்று மாலை வங்கியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்