தேவூர்:-
தேவூர் அருகே கனத்த மழையினால் நஞ்சங்காட்டுவளவு பகுதியில் மயிலாடி ஏரிக்கரை உடைந்தது. இதில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்தது.
ஏரிக்கரை உடைந்தது
ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் மழையால் சரபங்கா நதியில் கடந்த சில தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசிராமணி மோளாணி முனியப்பன் கோவில், குஞ்சாம்பாளையம், குள்ளம் பட்டி, செட்டிபட்டி வழியாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் தேவூர் தடுப்பணையை தாண்டி, அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து சென்றது. இந்த நிலையில் சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மோளாணி அணைக்கட்டு சரபங்கா வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் சென்று மயிலாடி வாய்க்கால் சிறிய ஏரி நிரம்பியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் மயிலாடி ஏரி தடுப்பு மண் கரை திடீரென உடைந்தது. இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பெரும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
விவசாய பயிர்கள் மூழ்கின
தண்ணீருடன் மண் இழுத்து செல்லப்பட்டதுடன், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல், பருத்தி, மஞ்சள், கரும்பு வயல்களில் பயிர்களை மண்கள் மூடி சேதம் ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்கள் பயிர்கள் மறைந்து மண் திட்டுகளாக காட்சி அளிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏரிக்கரை உடைப்பு சேதம் குறித்து தகவல் அறிந்ததும், அரசிராமணி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விஜயராகவன், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ், அரசிராமணி கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், அரசிராமணி பேரூராட்சி தலைவர் காவேரி, துணை தலைவர் கருணாநிதி, செந்தில் குமார், அரசிராமணி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிமுத்து, கணேசன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கரை உடைப்பை சரிசெய்யும் பணியை முடுக்கி விட்டனர்.