பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் முகாம்

வாணியம்பாடியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் முகாம் நடந்தது.;

Update:2022-11-03 23:47 IST

வாணியம்பாடி

வாணியம்பாடி நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற ஆலோசனை முகாம் நடைபெற்றது.

வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமை தாங்கினார். ஆணையாளர் மாரிசெல்வி, தாசில்தார் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சங்கர் வரவேற்றார்.

இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உதவி நிர்வாக பொறியாளர் வையாபுரி ஆகியோர் வங்கி கடன் பெற வழிமுறைகள் குறித்து கூறினர்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்துகொண்டு பேசினார். அப்போது, வளையாம்பட்டு ஊராட்சி, லாலா ஏரி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 528 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு வீடு ரூ.1 லட்சத்து 65ஆயிரம் மதிப்பாகும். வீட்டை குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முன்பணம் கட்டி மீதமுள்ள பணத்தை வங்கி மூலம் கடன் பெற்று தவணை முறையில் கட்ட வேண்டும்.

மேலும் நூருல்லாபேட்டை பகுதியில் ஏரி கால்வாய் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வீடுகளை இழந்த 48 குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

அப்போது வீடுகளை இழந்த 48 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து முன்பணம் செலுத்தி இருந்த 74 பேருக்கு வங்கி மூலம் கடன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் சண்முகம் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்