சுயஉதவிக்குழு பெண்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம்
தேனியில் மகளிர் திட்டம் சார்பில் சுயஉதவிக்குழு பெண்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.;
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் மாதாந்திர முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். இந்த முகாமில், 156 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.15 கோடியே 26 லட்சம் வங்கிக்கடன், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 35 மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, துணை கலெக்டர் (பயிற்சி) முகமது பைசல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.