கல்லூரி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்காக வருகிற 23-ந் தேதி மாபெரும் வங்கி கடன் முகாம் - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
கல்லூரி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்காக வருகிற 23-ந் தேதி மாபெரும் வங்கி கடன் முகாம் திருவள்ளூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.;
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேற்படிப்பிற்கான வங்கி கடன் வழங்குவதற்கான சிறப்பு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களில் இருந்து கல்லூரி பிரதிநிதிகள், அனைத்து வங்கி மேலாளர்கள், அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார அளவிலான கற்போர் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான மேற்படிப்பிற்கான வங்கி கடன் எளிமையாக வழங்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட அளவிலும் மற்றும் வட்டார அளவிலும் உதவி சேவை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 23-ந் தேதி மாபெரும் வங்கி கடன் முகாம் திருவள்ளூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நடைபெற உள்ளது. அந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.