சாலை விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பலி
குளித்தலையில் சாலை விபத்தில் சிக்கி வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;
வங்கி ஊழியர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழையஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் குளித்தலை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.குளித்தலை அருகே உள்ள நாப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் விஜயன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விஜயன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் விஜயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.