விருதுநகரில் கைது செய்யப்பட்ட கல்லூரி சேர்மனின் வங்கிக் கணக்கு முடக்கம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

கல்லூரியின் சேர்மனாக இருந்த தாஸ்வினின் வங்கிக் கணக்கை முடக்க விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-15 07:18 GMT

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளிடம் தவறான முறையில் வீடியோ காலில் பேசியதாக, கல்லூரி மாணவிகள் பலர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் தாஸ்வினை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட தாஸ்வின், தற்போது விருதுநகர் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியை சந்தித்து, தங்கள் கல்வியை தடையின்றி தொடர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மாணவிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார்.

இதையடுத்து கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்க வருவாய்த்துறைக்கு உத்தரவிட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, கல்லூரியின் சேர்மனாக இருந்த தாஸ்வினின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்