சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததை தட்டிக்கேட்டதால் பானிபூரி வியாபாரி அடித்துக்கொலை - வாலிபர் கைது
பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததை தட்டிக்கேட்டதால் பானிபூரி வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அமர் சிங் (வயது 39). இவர், தொழில் தேடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தார். திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். அவர், ரோட்டரி நகர் 7-வது பிரதான சாலையோரமாக தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 4-ந்தேதி இவரது கடையில் பானிபூரி சாப்பிட்ட வாலிபர் ஒருவர், அதற்கு பணம் தராமல் ஏமாற்றினார். அவரை அமர் சிங் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், அமர் சிங்கின் வயிற்றில் கடுமையாக குத்தினார். மேலும் கற்களை கொண்டும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து அவர் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில், திருவல்லிக்கேணியை சேர்ந்த விக்னேஷ் (26) என்ற வாலிபரை கொலை முயற்சி வழக்கின் கீழ் போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த அமர் சிங், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து விக்னேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.