துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபர் கைது - மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைப்பு
துபாயில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த வங்கதேச வாலிபரை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.;
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மேற்குவங்க மாநில முகவரியில் இந்திய பாஸ்போர்ட்டில் ஜொஹெல் ஷில் (வயது 24) என்பவர் வந்திருந்தார்.
அந்த வாலிபரின் பாஸ்போர்ட் மீது குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவருடைய பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தபோது அது போலியான பாஸ்போர்ட் என தெரியவந்தது.
அப்போது வங்காளதேச நாட்டை சேர்ந்த அவர் மனைவி, குழந்தையுடன் சட்ட விரோதமாக எல்லையை கடந்து இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்குள் ஊடுருவி உள்ளதும், மேற்குவங்க மாநிலத்தில் ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து இந்திய ஆதார் கார்டு வாங்கி அதன் மூலம் போலி இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணியை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த போலி பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர். போலி பாஸ்போர்ட்டை எந்த ஏஜெண்டிடம் எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்? இவர் துபாய் சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்த காரணம் என்ன? என்ற கோணங்களில் விசாரணை நடத்தினர். பின்னர் மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.