போலி பாஸ்போர்ட் மூலம் டாக்கா செல்ல முயன்ற வங்கதேச பெண் கைது - சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் டாக்கா செல்ல முயன்ற வங்கதேச பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-11-30 15:07 IST

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வங்காளதேசம் தலைநகர் டாக்காவுக்கு விமானம் செல்ல தயாராக இருந்தது. இதில் செல்லும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது ரீனா பேகம் (வயது 37) என்ற பெண் இந்திய பாஸ்போர்ட்டுடன் சுற்றுலாப் பயணிகள் விசாவில் டாக்கா செல்வதற்காக வந்து இருந்தார். அப்போது குடியுரிமை அதிகாரிகளுக்கு அந்த பயணியின் பாஸ்போர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாஸ்போர்ட்டை பரிசோதித்த போது, அது போலியான பாஸ்போர்ட் என தெரியவந்தது.

உடனே ரீனாபேகத்தின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். மேலும் தொடர்ந்து, அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் வழியாக அவர் இந்தியாவுக்கு வந்ததாகவும், இந்தியாவில் உள்ள ஏஜென்டுகள் பணத்தை பெற்று கொண்டு போலி பாஸ்போர்ட்டை அவருக்கு தயார் செய்து தந்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து போலி பாஸ்போர்ட்டை அவர் எதற்காக வாங்கினார்? சென்னைக்கு வந்ததன் காரணம் என்ன? சென்னையில் எங்கு தங்கியிருந்தார்? என விசாரணை நடத்தினர். பின்னர் அவரை மேல் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்