வேங்கைவயல் வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்
வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராகினர். இன்று (சனிக்கிழமை) மீண்டும் கோா்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.;
டி.என்.ஏ. பரிசோதனை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கண்டறியும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தில் இருந்து தடயவியல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதேபோல் 180-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் 13 பேரிடம் டி.என்.ஏ. பாிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
8 பேர் ஆஜர்
இந்த நிலையில் தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர். அவர்கள் பரிசோதனைக்கு விருப்பமில்லை என தெரிவித்ததோடு, அவர்கள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதில் 8 பேரையும் பரிசோதனைக்குட்படுத்த ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. மேலும் வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அதன்படி வேங்கைவயல் பகுதியை சேர்ந்த சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பான சம்மன் 8 பேருக்கும் கோர்ட்டு மூலம் வழங்கப்பட்டது.
மீண்டும் ஆஜராக உத்தரவு
மேலும் இதில் ஆட்சேபனை இருந்தால் இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்குள் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்படுவது இன்று தெரிந்துவிடும்.