பேண்டேஜ் துணி நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும்

சர்வதேச சந்தையில் தக்க வைக்க பேண்டேஜ் துணி நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-02 19:47 GMT

ராஜபாளையம்,

சர்வதேச சந்தையில் தக்க வைக்க பேண்டேஜ் துணி நூல் விலையை மேலும் குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூல்விலை உயர்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம், சமுசிகாபுரம் ஆகிய பகுதிகளில் சர்வதேச அளவில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தியில் 90 சதவீத உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி நூல் விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருந்தது. பின்னர் நாளடைவில் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை அதிகரித்தது. இதனால் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் தற்போது ஒரு கேண்டி நூல் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்ந்தது.

நூல் விலை குறைவு

விலை உயர்வு காரணமாக ஆர்டர் எடுத்த நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க இயலாத நிலையில் கடுமையான நஷ்டத்தை மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சந்தித்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி நூல் விலை குறைந்து ரூ.75 ஆயிரத்திற்கு வந்து விட்டது. நூல் விலை குறைப்பு ஒரு புறம் மகிழ்ச்சி அளித்தாலும் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் குறையவில்லை. பழைய விலைக்கு அதாவது ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் விலைக்கு விற்றால் ஓரளவு எங்களால் தாக்கு பிடிக்க முடியும். உற்பத்தியையும் அதிகரிக்கலாம். எனவே நூல்விலை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத படி குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மருத்துவ துணிகள் ஏற்றுமதி

இதுகுறித்து மருத்துவ துணி ஏற்றுமதியாளர் சரவணமுருகன் கூறியதாவது:-

சத்திரப்பட்டி பகுதியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ துணி தயாரிக்கும் நிறுவனங்களும், விசைத்தறி கூடங்களும் செயல்படுகின்றன. இங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் மருத்துவ துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நூல் விலை உயர்வு காரணமாக வேலைகள் இல்லாமல் தொழிலாளர்களும், ஏற்றுமதியாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக நூல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பினால் சத்திரப்பட்டி பகுதி மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு இருந்த ஒரு கேண்டி விலை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரத்திற்கு விற்க நடவடிக்கை வேண்டும். அவ்வாறு குறைக்க நடவடிக்கை எடுத்தால் சர்வதேச சந்தையில் தக்க வைக்க முடியும் என்றார்.


தொழிலாளிகள் கருத்து

பொன்னுத்தாய்:- கடந்த 6 மாத காலமாக நூல் விலை ஏற்றத்தினால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்களுக்கு இதனால் பாதி வேலையும் பாதி சம்பளமும் தான் கிடைத்தது. தற்போது நூல் விலை குறைந்ததால் முழு நேர வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் எங்களுக்கு தொடர்ந்து முழு நேர வேலை கிடைக்க நூல் விலையை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்.

கணேசன் கூறியதாவது:- நானும், எனது மனைவியும் வேலைக்கு செல்கிறோம். இருப்பினும் நூல் விலை உயர்வு காரணமாக எங்களுக்கு முழுமையான வேலை கிடைக்கவில்லை. பாதி சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாது. தற்போது நூல் விலை குறைவால் முழுமையான நேரம் விசைத்தறிகள் மற்றும் மருத்துவ துணி நிறுவனங்கள் இயங்குகின்றன. இதனால் எங்களுக்கும் முழு நேர வேலையும். சம்பள உயர்வும் அதிகரிக்கும். 

Tags:    

மேலும் செய்திகள்