சுழல் காற்றால் வாழை மரங்கள் சேதம்

கும்பகோணம் பகுதியில் சுழல் காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-05-30 19:15 GMT

கும்பகோணம் பகுதியில் சுழல் காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுழல் காற்று

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கருமேகங்கள் திடீரென திரண்டன. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் வெயிலில் கடும் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அப்போது கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கடும் சுழல் காற்று வீசத் தொடங்கியது. இதனால் நகர் முழுவதும் மண் தூசுகள் காற்றில் அலையடிக்க தொடங்கின.

வாழை மரங்கள் சேதம்

நகரின் பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. கடுமையாக வீசிய சுழல் காற்றால் நகரமே குப்பை கூளமாக மாறின.

மேலும் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் சுழல் காற்றில் சிக்கி முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல லட்சம் முதலீடு

இது குறித்து கும்பகோணத்தை அடுத்த மாங்குடி பகுதியில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

நான் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளேன். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் வீட்டின் வாசலில் கட்டப்படும் வாழை மரங்களுக்கென பிரத்யேகமாக வாழை கன்றுகளை நடவு செய்து இருந்தேன். இவற்றுக்கு அறுவடை காலம் வரை பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளேன். தற்போது மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடை நடைபெற்று வருகிறது.

முன்பணம்

இந்த மாதம் சுப முகூர்த்த நாட்கள் அதிகமாக இருப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் வாழை மரங்களையும் வாழை இலைகளையும் வாங்குவதற்காக எங்களிடம் முன்பணம் செலுத்தி உள்ளனர். இந்த நிலையில் தற்போது வீசிய சுழல் காற்றால் ஏராளமான மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததோடு இலைகள் அனைத்தும் கிழிந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் எங்களிடம் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு எங்களிடம் மரமும் இலையும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு

தற்போது வாழை மரங்களை உற்பத்தி செய்வதற்காக செய்த முதலீடு முழுவதும் வீணானது மட்டுமல்லாமல் எங்களிடம் ஆர்டர் கொடுத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து அதிக விலைக்கு வாழை மரங்களையும், இலைகளையும் வாங்கி தரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சுழல் காற்றால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்