நீலகிரியில் வளர்ப்பு பன்றிகள் விற்க தடை

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-06 04:21 GMT

ஊட்டி,

தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம், கா்நாடக மாநிலம் பந்திப்பூா் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றிணைந்த தொடா் வனப்பகுதியாக நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முதுமலை வனப்பகுதி உள்ளது.

கடந்த சில நாள்களாக முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் அடுத்தடுத்து காட்டு பன்றிகள் தொடா்ந்து உயிரிழந்து வந்தன. இந்தக் காட்டு பன்றிகளை, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவக் குழுவினா், கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு மருத்துவக் குழுவினா் ஆகியோா் உடற்கூறு ஆய்வு செய்து முக்கியமான உறுப்புகளை சென்னை மற்றும் டெல்லிக்கு ஆய்வுக்கு அனுப்பினா். இதில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் நிருபா்களிடம் கூறியதாவது:-

ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் மனிதா்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை. தமிழகம், கேரளம், கா்நாடக மாநில அரசுகளின் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் நாளை(இன்று) காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்துக்கு பின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே கூடலூா் வனத்துறை அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், காட்டுப் பன்றிகள் இறப்புச் சம்பவங்கள் குறித்து நிலைமை சீரடையும் வரை, நீலகிரியில் வளா்ப்பு பன்றிகளை விற்க தடை விதிக்கப்படுகிறது. இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்