அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு தடை

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்ததுடன், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்றும் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2022-07-01 20:20 GMT

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்ததுடன், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது என்றும் மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

ஐகோர்ட்டில் மனு

மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த ஷீலா பிரேம்குமாரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவியாக உள்ளேன். பி.எஸ்சி., பி.எட்., முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வை கடந்த 2013-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றேன். என்னைப்போல இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானவர்கள், அப்போது நடைமுறையில் இருந்த வெயிட்டேஜ் முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.

இந்தநிலையில் தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு, அதுதொடர்பாக கடந்த 23-ந் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். எனவே அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

ஆபத்தானது

இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது ஆபத்தானது என கருத்து தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இடைக்கால தடை

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, "நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை. எனவே அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்