நீலகிரியில் முதல் முறையாக பலூன் திருவிழா
நீலகிரியில் முதல் முதலாக பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் கூறினர்.;
ஊட்டி
நீலகிரியில் முதல் முதலாக பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் கூறினர்.
ஊட்டிக்கு வயது 200
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது.
இதையொட்டி புகைப்பட கண்காட்சி மற்றும் திரைப்பட விழா, தேயிலை கண்காட்சி, ஹெலிகாப்டர் சுற்றுலா, பலூன் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டது. ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு கோர்ட்டு அனுமதி மறுத்ததால், அந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டது.
பலூன் திருவிழா
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள கர்நாடக தோட்டக்கலைத்துறை பூங்கா அருகில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பலூன் திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. இதில் ஒருமுறை 3 பேர் பயணம் செய்யலாம். ஒரு நபருக்கு ரூ.1,600 கட்டணம். 5 முதல் 10 நிமிடங்கள் பயணம் செய்யலாம்.
முன்னதாக நடந்த தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டு கூறுகையில், சோதனை முயற்சியாக இந்த ஆண்டு பலூன் திருவிழா தொடங்கப்பட்டு உள்ளது. வெற்றிகரமாக அமைந்தால் எல்லா ஆண்டும் நிறைய பலூன்கள் கொண்டுவரப்பட்டு பொள்ளாச்சி பலூன் திருவிழா போல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது கலெக்டர் அம்ரித் உள்பட பலர் உடனிருந்தனர்.
உற்சாகம் பிறக்கிறது
பலூன் திருவிழா குறித்து சுற்றுலா பயணிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஷகீர்-ஹமீதா தம்பதி:
எந்த ஒரு பொருளையும் உயரத்தில் இருந்து பார்க்கும்போது பிரமிப்பு தெரியும். நமக்கு தெரியாமலேயே உற்சாகம் பிறக்கும். பலூனில் மேலே பறந்து அந்தரத்தில் இருந்தவாறு கீழே உள்ள பகுதிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ் பாபு-கவிதா:
இந்த ஆண்டு பல்வேறு புதுப்புது நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பலூன் திருவிழாவும் தொடங்கி இருப்பதாக கூறியதால் இங்கு வந்தோம். பலூனை பொறுத்த வரை நாம் மட்டுமல்ல யார் பறந்தாலும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் பலூனில் ஏறி பறக்கலாம். உயரத்தில் பலூனில் சென்று புகைப்படம், செல்பி எடுத்துக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கட்டணத்தை குறைக்கலாம்
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹிகாபு-ஷில்பத்:
இதற்கு முன்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடந்தது. அங்கு பலூனில் நீண்ட தூரம் பறந்து விட்டு, கீழே வந்தோம். ஆனால் மலைப்பிரதேசம் என்பதால் பாதுகாப்பு விதிமுறைகளை கருத்தில் கொண்டு, இங்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மட்டும் பலூன் பறக்கும் என்று கூறி இருக்கிறார்கள். இது சற்று ஏமாற்றமளிக்கிறது. இருந்தாலும் குழந்தைகள் பலூனில் பறக்க ஆசைப்படுகின்றனர். கட்டணத்தை சற்று குறைத்தால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.