100-வது முறையாக கைதாகி சிறைக்கு சென்ற பலே திருடன்
14 வயதில் போண்டா திருட தொடங்கி தற்போது 100-வது முறையாக பலே திருடன் கைதானார். அவர் திருடிய பொருட் களை விற்ற பணத்தை கூகுள்பே மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார்.;
கோவை
14 வயதில் போண்டா திருட தொடங்கி தற்போது 100-வது முறையாக பலே திருடன் கைதானார். அவர் திருடிய பொருட் களை விற்ற பணத்தை கூகுள்பே மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் பறிப்பு
கோவை குனியமுத்தூர் மூர்த்தி நகரை சேர்ந்தவர் சபீர் அகமது (வயது 42). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் குனியமுத்தூரில் இருந்து ஒப்பணக்கார வீதிக்கு பிரகாசம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அருகில் நின்ற நபர், சபீர்அகமதுவின் பாக்கெட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சபீர் அகமது கூச்சலிட்டார். உடனே அங்கு சாதாரண உடையில் இருந்த சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீசார் பூபதி, கார்த்தி அந்த ஆசாமியை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கோவை செல்வபுரம் அரசமரம் வீதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற போண்டா ஆறுமுகம் (வயது55) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் போலீசாருக்க பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக போண்டா ஆறுமுகம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் கூறியதாவது:-
14 வயதில் திருட்டு
நான் எனது 14 வயது முதல் திருட தொடங்கினேன். அப்போது போலீசார் என்னை கைது செய்து பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
அதன்பிறகு வெளியே வந்தது வேறு எந்த வேலை எதற்கும் செல்லாமல் திருட்டில் ஈடுபட்டு வருகிறேன். முதல் முதலில் போண்டா திருடி கைதானதால் என்னை போண்டாஆறுமுகம் என அழைக்க தொடங்கினர். அது நன்றாக இருந்ததால் நானும் அந்த பெயரை வைத்து கொண்டேன்.
உல்லாசம்
ஓடும் பஸ்சில் திருடினால் சுலபமாக தப்பிவிடலாம். எனவே டிப்டாப்பாக உடை அணிந்து சென்ற கூட்டமாக இருக்கும் பஸ்களில் ஏறி பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என யாரிடம் எது கிடைத்தாலும் திருடி விடுவேன். பெண்களின் கைப்பையை திறந்து நகை, செல்போனை அபேஸ் செய்வேன்.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் திருடுவேன். திருடிய பொருட்களை விற்ற பணத்தில் ஆடம்பரமாக வாழ்வேன். மது, கஞ்சா குடித்தும், மசாஜ் மற்றும் உல்லாசமாகவும் இருந்துவந்தேன்.
கூகுள் பே மூலம் பணம்
எனக்கு மனைவியும், 2 குழந்தைகளும் திருச்சூர் அருகே குளவாளி என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்க திருடிய நகையை விற்று கூகுள் பே மூலம் பணம் அனுப்புவேன். வாரம் ஒருமுறை சென்று குடும்பத்தினருடன் தங்கி இருப்பேன்.
தற்போது எனக்கு 53 வயதாகிறது. 39 வருடங்களாக நூற்றுக் கணக்கான திருட்டில் திருட்டில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் போலீசாரிடம் இருந்து தப்பி முயற்சி செய்வேன்.
100-வது முறையாக கைது
ஆனால் எப்படியாவது போலீசார் என்னை பிடித்து விடுவார் கள். இதுவரை 99 முறை சிறைக்கு சென்றுள்ளேன். தற்போது 100-வது முறையாக சிறைக்கு செல்கிறேன். நான் மாலை நேரத்தில் தான் பஸ்சில் பிக்பாக்கெட் அடிப்பேன்.
பொதுமக்கள் பிடித்தால் பயங்கரமாக கத்தி கூச்சல் போடுவேன். அவர்கள் குழப்பத்துடன் இருக்கும்போது தப்பி ஓடிவிடுவேன். மாலை நேரத்தில் பிடிபட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றால் இரவில் தங்க வைக்கமாட்டார்கள். அதை தெரிந்தே மாலை நேரத்தில் திருட்டில் ஈடுபட்டேன்.
இவ்வாறு போண்டா ஆறுமுகம் கூறினான்.
100 -வது முறையாக கைதான போண்டா ஆறுமுகத்தை நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.