தேவநாத சாமி கோவிலில் பாலாலயம் நிறைவு
திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் பாலாலயம் நிறைவடைந்தது.;
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இ ந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது. இதையொட்டி, திருப்பணிகளை தொடங்கிடும் வகையில், பாலாலயம் பூஜை கோவிலில் கடந்த 5-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்றைய தினம் பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், யாகம், பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நேற்று முன்தினம் காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், யாகம், பூர்ணாகுதியும், மாலையில் மகா சாந்தி யாகம், மகா சாந்தி திருமஞ்சன யாகம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது.
நேற்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து, கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.