பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
பக்ரீத் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.;
பக்ரீத் பண்டிகையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகை
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கையில் ஏராளமான முஸ்லிம்கள் சிவகங்கை-மதுரை ரோட்டில் உள்ள ஈத்கா திடலில் காலை 7 மணிக்கு சிறப்பு தொழுகை நடத்தினர்.
சிறப்பு சொற்பொழிவை சிவகங்கை-தொண்டி ரோட்டில் உள்ள ஆதம் பள்ளிவாசல் இமாம் சுல்தான் ஹைரி நிகழ்த்தினார். சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது ஆபிதீன் பார்கவி சிறப்பு தொழுகை நடத்தினார். சிவகங்கை இந்திரா நகரில் உள்ள பள்ளிவாசலில் இமாம் முஹம்மது மன்சூர் காசிபி தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் சிவகங்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு தொழுகை
காரைக்குடி சின்னையா அம்பலம் பள்ளி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை மாவட்ட செயலாளர் சாகுல் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். காரைக்குடி ஆசாத் பள்ளியில் உள்ள ஈதுகா மைதானத்தில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் காலை 8.45 மணிக்கு சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர்.
திருப்பத்தூரில் சமஸ்கான் பள்ளி வாசல், புதுத்தெரு பள்ளி வாசல், மின்நகர் பள்ளி வாசல், அண்ணாசிலை பள்ளி வாசல், கான்பாநகர் பள்ளி வாசல், புதுப்பட்டி பள்ளிவாசல், அச்சுக்கட்டு பள்ளிவாசல் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் ஜமாத்தார்கள் தலைமையில் திருப்பத்தூர் பெரிய பள்ளிவாசல் பகுதியில் ஒன்று கூடி ஊர்வலமாக வந்து அச்சுக்கட்டு பகுதியில் உள்ள ஈதுகா மைதானத்தில் மாவட்ட தலைமை ஹாஜி முகமதுபாரூக்ஆலின் தலைமையில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அவர்களின் வீடுகளில் ஏழை, எளியோர்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இளையான்குடியில் மேலப்பள்ளிவாசல், ஐ.என்.பி.டி. ஜூம்மா பள்ளி வாசல், சாலையூர் ஹனபி பள்ளிவாசல், ஷாபிப் பள்ளிவாசல், புதூர் தைக்கா மற்றும் பெரிய பள்ளிவாசல், கீழாயூர் பள்ளி வாசல், கருஞ்சுத்தி பள்ளிவாசல், வடக்கு சாலைகிராமம் பள்ளிவாசல், சாலைக்கிராமம் பள்ளிவாசல், மல்லிபட்டினம் பள்ளிவாசல் மற்றும் திடல் பகுதி, காதர் பிச்சை தெரு பகுதி மற்றும் ஸ்டேட் வங்கி பின்புறம் பகுதியில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கம்புணரி பஸ் நிலையம் எதிரில் பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
இதேபோல் தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.