மண்டபம் வடக்கு, தெற்கு கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்டும் பணி மும்முரம்

ரூ.100 கோடியில் மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு கடல்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update:2023-06-03 00:15 IST

பனைக்குளம், 

ரூ.100 கோடியில் மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு கடல்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

படகுகள் சேதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. மீன்பிடி தொழிலை நம்பி மட்டும் மாவட்டத்தில் 2000-க்கும் அதிகமான விசைப்படகுகளும், 10,000-க்கும் அதிகமான நாட்டுப் படகு, பைபர் படகுகளும் உள்ளன. மாவட்டத்திலேயே அதிகமான விசைப்படகுகளை கொண்ட 2-வது ஊர் மண்டபம் பகுதிதான்.

மண்டபம் வடக்கு மற்றும் தென்கடல் பகுதியில் மட்டும் மீன்பிடி தொழிலை நம்பி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனில் வீசும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மண்டபம் தெற்கு மற்றும் வடக்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்படும் விசைப்படகுகள் நங்கூர கயிறு அறுந்து ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மண்டபம் கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்டித்தர வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

தூண்டில் வளைவு

இதையடுத்து மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் மத்திய அரசின் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி நிதியில் கடலுக்குள் தூண்டில் வளைவு கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது தூண்டில் வளைவு கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுவரையிலும் வடக்கு கடல் பகுதியில் 800 மீட்டர் தூரத்திற்கு பாராங்கற்கள் முழுமையாக கொட்டும் பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது கற்களை பொக்லைன் எந்திரம் மூலம் வரிசையாக தடுப்பு சுவர்கள் போல் அடுக்கி வைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும் கடலுக்குள் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியாக தூண்டில் வளைவு முடிவடையும் கற்கள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் ஏராளமான அலங்கார கற்களும் கடல் பகுதியில் போடப்பட்டுள்ளன. இதேபோல் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரிய பாராங்கற்களை குவித்து தூண்டில் வளைவு கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

பருவமழை சீசன்

இதுகுறித்து மீன் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.100 கோடியில் தூண்டில் வளைவு மீன்பிடி இறங்கு தளம் மற்றும் மீன்கள் ஏலக்கூட கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

இதில் மீன்பிடி இறங்கு தளம் மற்றும் ஏல கூட கட்டிட பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன.

தற்போது வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் தூண்டில் வளைவு கட்டும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக தூண்டில் வளைவு கட்டும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்