தமிழகம் முழுவதும் பதநீர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும்-எர்ணாவூர் நாராயணன் பேட்டி

தமிழகம் முழுவதும் பதநீர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும் என்று பனை தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

Update: 2022-07-24 19:54 GMT

'தமிழகம் முழுவதும் பதநீர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும்' என்று பனை தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறினார்.

உறுப்பினர் சேர்க்கும் முகாம்

தமிழ்நாடு பனை தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. பனை தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை தாங்கி, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பனையேறும் தொழிலாளர்களுக்கு நிவாரணம், கல்வி மற்றும் திருமண உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி பேசினார்.

இந்த முகாமில் தொழிலாளர் உதவி ஆணையாளர் குலசேகரன், நலவாரிய உறுப்பினர்கள் சடையப்பன், பசுமைவளவன், சமத்துவ மக்கள் கழக மாநில அமைப்பு செயலாளர் கணேசன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் கோயில்தாஸ், மத்திய மாவட்ட செயலாளர் பிரகாஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் பனை தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 23-ந் தேதி தமிழ்நாடு பனை தொழிலாளர் நலவாரிய தலைவராக நியமிக்கப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் பனை நலவாரியம் செயல்படாமல் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

பதநீர் விற்பனை நிலையம்

தமிழகம் முழுவதும் பனை தொழிலாளர்களை சந்தித்து நலவாரியத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது காவல்துறை தேவை இல்லாமல் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இதனை கைவிட வேண்டும். தமிழக டி.ஜி.பி. பதநீர் இறக்கும் தொழிலாளர்கள் மீது வழக்கு போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில் வழக்கு போடும் செயலை காவல்துறை கைவிட வேண்டும். பதநீர் விற்பனை செய்ய பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் தமிழ்நாடு முழுவதும் பால் பூத்து போன்று புதியதாக பதநீர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு பனை தொழில் செய்வதற்கான பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுத்தமான கருப்பட்டி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பனை தொழிலாளர் நல வாரியம் மேற்கொள்ளும்.

அதிகாரிகள் ஆய்வு

தமிழக அரசு உத்தரவின் பேரில் ரேஷன் கடைகளில் பனைவெல்லம் கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. பனை தொழிலாளர் நலவாரியம் மூலம் ரேஷன் கடைகளில் பனை கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். பனை நலவாரியத்தில் ஒரு லட்சம் நபர்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிதி உதவி

முன்னதாக எர்ணாவூர் நாராயணன், நாங்குநேரி தொகுதி காரியாண்டியில் பனைமரம் ஏறி பதநீர் இறக்கும் துரைப்பாண்டி நாடார் (வயது 90), அவரது மனைவி வேலம்மாள் (85) ஆகியோரின் வீட்டிற்கு சென்று நிதி உதவி வழங்கினார்.

அப்போது, சமத்துவ மக்கள் கழக நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் டோனாவூர் கோயில்தாஸ், ராமகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வளர்மதி சேர்மத்துரை, வணிகர் சங்க செயலாளர் மகாராஜன், தி.மு.க. நிர்வாகி சார்லஸ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்