தர்மபுரியில் 2 நாளாக பூட்டிய வீட்டில் துர்நாற்றம்.. திறந்து பார்த்த மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
தர்மபுரியில் பூட்டிய வீட்டிற்குள் 2 குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.;
காரிமங்கலம்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டியூர் பகுதியை சேர்ந்தவர் சிவன் (வயது 38 ).ஆட்டோ டிரைவரான இவருக்கு நந்தினி ( 28) என்ற மனைவியும் அபினேஷ் ( 6), தர்ஷன் (5) என இரண்டு மகன்களும் இருந்தனர்.
சிவன் - நந்தினிக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகின்றன. நந்தினி வீட்டின் அருகில் உள்ள தனியார் மாவு மில்லில் வேலைக்கு சென்று வந்தார். இதற்கிடையே, கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவன் வீட்டில் கடுமையான துர்நாற்றம் 2 நாட்களாக வீசியது. இது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிவனின் வீட்டை எட்டிப் பார்த்தபோது நந்தினியும் அவரது இரண்டு குழந்தைகளும் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த மூன்று பேரின் பிணத்திற்கு அருகே சிவன் மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்
உடனே அக்கம் பக்கத்தினர் காரியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் சிவனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர் அங்கு மூன்று பேரின் உடல்களும் அழிய நிலையிலும் அதன் அருகில் சிவன் மயங்கிய நிலையிலும் கிடந்தார் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்த மூன்று பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ டிரைவரான சிவன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை முதலில் கொலை செய்து விட்டு அதன் பிறகு தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.