காவிரி ஆற்றில் செத்துக்கிடந்த முதலை குட்டி
காவிரி ஆற்றில் முதலை குட்டி செத்துக்கிடந்தது.;
திருச்சி காவிரி ஆற்றில் மேலசிந்தாமணி மகாத்மாகாந்தி படித்துறை பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் வந்து குளித்துச்செல்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். ஆனால் அதை பலர் மறுத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை காவிரி ஆற்றுக்குள் இறங்கி போராட்டம் நடத்துவதற்காக மகாத்மாகாந்தி படித்துறைக்கு விவசாயிகள் சென்றனர். அப்போது ஆற்றில் கரையோரம் தண்ணீரில் சுமார் 1½ அடி நீளம் உள்ள குட்டி முதலை ஒன்று கிழிந்த வலையில் சிக்கிய நிலையில் செத்துக்கிடந்தது. இதை பார்த்து, போராட்டத்துக்கு வந்த விவசாயிகளும், பாதுகாப்புக்கு வந்த போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த குட்டி முதலையை வனத்துறையினர் எடுத்துச்சென்று புதைத்தனர். ஏற்கனவே அந்த பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தினமும் காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துவரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காவிரி ஆற்றின் நடுவில் உள்ள நாணல் புதரின் நடுவில் முதலைகள் பதுங்கி இனப்பெருக்கம் செய்து இருக்கலாம் என்றும், மீன்பிடிப்பவர்கள் விட்டுச்சென்ற வலையில் சிக்கி அது இறந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதனிடையே காவிரி ஆற்றில் உள்ள பெரிய முதலையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.