மேற்குதொடர்ச்சி மலையில் சாரல் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது;
விக்கிரமசிங்கபுரம்:
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பாபநாசம் அணை
தென் மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணைகளில் ஒன்றாக உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணை உள்ளது. இந்த அணை தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக திகழ்கிறது.
இந்தநிலையில் கடந்த பல நாட்களுக்கு முன் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைவாக இருந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
நீர்மட்டம் உயர்வு
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயரத்தொடங்கி உள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு 1,090.65 கனஅடி நீர் வந்தது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 1,909.95 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 55.90 அடியாக இருந்தது. நேற்று 58 அடியாக உயர்ந்துள்ளது.
அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.