கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் கோவில்களில் நேற்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Update: 2022-11-17 18:45 GMT

மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். பின்னர் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டு நேற்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். இதையொட்டி அந்தந்த பகுதியில் உள்ள குருசாமிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர்.

சிறப்பு பூஜை

அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் சாலக்கரை மாரியம்மன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதியில் நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, குருசாமி மாலை அணிவித்ததும், அவர்கள் விரதத்தை தொடங்கினர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், வேடப்பர் கோவில், கொளஞ்சியப்பர் கோவில், மணிமுக்தாற்றங்கரை விநாயகர் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக நேற்று காலை ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்