விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகம்
விழுப்புரத்தில் ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.;
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் நவராத்திரியும் ஒன்றாகும். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்நாட்களில் கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவார்கள். நவராத்திரி விழாவின் நிறைவு நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அனைத்து பொருட்களிலும் இறைவன் நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பூஜை கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி
ஆயுதபூஜைக்கு அடுத்த நாள் விஜயதசமியாகும். அதன்படி நாளை (புதன்கிழமை) விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதில் ஆயுதபூஜையன்று சரஸ்வதி தேவியின் முன், பூஜையில் வைத்த நோட்டு, புத்தகத்தை எடுப்பதை ஏடு பிரித்தல் என்று சொல்வார்கள். பூஜையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தில் இருந்து பாடங்களை படிப்பதும், தொழில் கருவிகளை கொண்டு தொழிலை தொடங்குவதும் மிகவும் நன்மை தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பூஜை பொருட்கள் விற்பனை
ஆயுதபூஜை வழிபாட்டிற்கான பொருட்கள் விற்பனை நேற்று விழுப்புரம் பகுதியில் அமோகமாக நடந்தது. இதையொட்டி விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா சாலைகளில் உள்ள மார்க்கெட்டுகள் மற்றும் நேருஜி சாலை, கே.கே.சாலையில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களான அவல், பொரி, பொட்டுக்கடலை மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதை விழுப்புரம் நகர மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூஜைக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர். இதனால் மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் நகரில் காலை முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.