உத்தமபாளையம் அருகே பரிதாபம்: கல்லால் எறிந்து பச்சிளங்குழந்தை கொடூர கொலை

உத்தமபாளையம் அருகே, வரதட்சணை கேட்டு நடந்த தகராறில் பிறந்து 1 மாதமேயான பச்சிளங்குழந்தையை கல்லால் எறிந்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-06-18 13:53 GMT

காதல் திருமணம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 23). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதி. உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி லூர்துநகரை சேர்ந்தவர் நவீனா (22). இவர்கள் 2 பேரும் காலித்து கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் 7 மாத கர்ப்பிணியான நவீனாவிடம், அவரது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வர சொல்லி நாகராஜ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ராயப்பன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நவீனா சென்று விட்டார்.

நகை கேட்டு தகராறு

இதற்கிடையே கடந்த மாதம் ராயப்பன்பட்டியில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்த நாகராஜ் 5 பவுன் நகை கேட்டு தகராறு செய்தார். அப்போது அங்கு இருந்தவர்கள், குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கான சீர்வரிசை மற்றும் 5 பவுன் நகையை தருவதாக உறுதியளித்ததாக தெரிகிறது.

அதன்பிறகு நாகராஜ் தேவதானப்பட்டிக்கு சென்றார். இதற்கிடையே நவீனாவுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ராயப்பன்பட்டிக்கு நாகராஜ் வந்தார்.

மாமியார் முத்துலட்சுமியிடம் நகை தொடர்பாக பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து குழந்தையுடன் நவீனா வெளியே வந்து வாசலில் நின்றார்.

குழந்தை சாவு

பின்னர் அவர், தனது கணவரிடம் தகராறு செய்யாதீர்கள் என்றார். அப்போது நாகராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை நோக்கி எறிந்தார். இதில் கல் தவறி குழந்தையின் தலையில் பட்டது. இதனால் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதையடுத்து நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நாகராஜை தேடி வந்தனர். இதற்கிடையே தேவதானப்பட்டியில் பதுங்கி இருந்த நாகராைஜ நேற்று  போலீசார் கைது செய்தனர். பிறந்து 1 மாதமான குழந்தையை தந்தையே கல்லால் எறிந்து கொன்ற கொடூர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்