நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்பு;
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் ஆண்களுக்கு 10 கி.மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கி.மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஆண்கள் பிரிவில் மாணவன் மோகன்குமார் முதலிடத்தையும், தமிழ்மணி 2-ம் இடத்தையும், லட்சுமணன் 3-ம் இடத்தையும் பிடித்தனர். இதேபோன்று பெண்கள் பிரிவில் திவ்யா முதலிடத்தையும், கிருத்திகா 2-வது இடத்தையும், லதா 3-வது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்களை சின்ராஜ் எம்.பி. வழங்கினார். இதுபோன்று போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் தடகள சங்க செயலாளர் வெங்கடாஜலபதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.