குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் அறிவுறுத்தல்
குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
சுகாதாரத்துறை பணிகள் குறித்தான ஆய்வுக்கூட்டம் மற்றும் மகப்பேறு மரணம், குழந்தை மரணம் குறித்தான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 17 ஆயிரம் மாணவிகளுக்கு வரப்பட்ட முடிவின் அடிப்படையில் சிகிச்சை அளிப்பது குறித்தும் மாவட்டத்தில் நடைபெறும் சிசு மரணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு இறப்பிற்கான காரணங்களை ஆய்வு செய்வதுடன் சிசு இறப்பை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.
குழந்தை பிறந்த பின்பும் பிரசவகால பின் 48 நாட்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியர்களால் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வு செய்து பிறவி காது கேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறிய வேண்டும்.
மருந்துகள் இருப்பு
மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு எல்லா மருத்துவமனைகளிலும் குறைந்தது 3 மாத இருப்புகள் இருப்பதை அந்தந்த மருத்துவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் மற்றும் டெங்குவினால் தீவிர நோய் பரவல் ஏற்படா வண்ணம் இருக்க அறிவுறுத்தப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். குடும்ப நல அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அவற்றை சரி செய்வது குறித்து கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, துணை இயக்குனர் சந்தோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.