புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

முதுமலையில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-07-29 21:00 GMT

கூடலூர்

முதுமலையில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புலிகள் தின விழா

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உலக புலிகள் தின விழா, கலெக்டர் அம்ரித் தலைமையில் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. புலிகளின் முக்கியத்துவம், காடுகளின் பாதுகாப்பு, மனித-விலங்கு மோதலை தடுப்பது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படம் பழங்குடியின மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.

பேரணி

இதையடுத்து முகாம் வளாகத்தில் மரங்களின் பொந்துகளில் பைக்கஸ் தாவரங்களை பதிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் துணை இயக்குனர்கள் வித்யா, அருண் மற்றும் பழங்குடியினர் சூழல் மேம்பாட்டு குழு ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் மசினகுடியில் மாணவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் பங்கேற்ற புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அங்குள்ள பெட்ரோல் நிலைய பகுதியில் தொடங்கிய பேரணி முக்கிய சாலை வழியாக சென்று வனத்துறை சோதனைச்சாவடியை அடைந்தது.

பரிசு

பின்னர் சிறந்த ஓவியம் வரைந்த கேத்தன், மாண்பி, கேத்தி ஆகியோருக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். இதில் வனச்சரகர்கள் பாலாஜி, ஜான் பீட்டர், தயானந்தன் மற்றும் வனத்துறையினர், மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் புலி முக மூடியை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊட்டி அரசு கல்லூரி

இதேபோன்று உலக புலிகள் தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை உதவி பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், வனவிலங்கு உயிரியல்துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

தொடர்ந்து புலிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி பேராசிரியர் வித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்