வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்;

Update: 2022-08-12 19:51 GMT

75-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற வலியுறுத்தி தஞ்சையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

விழிப்புணர்வு ஊர்வலம்

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தொழிற்சாலைகள், வீடுகளில் இன்று(சனிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மாநகராட்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி ஆகியவை சார்பில் தஞ்சையில் நேற்று ஊர்வலம் நடந்தது.

தஞ்சை ரெயிலடியில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் தேசியக்கொடிகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பெரியகோவிலில் முன்பு நிறைவடைந்தது.

உறுதிமொழி

பின்னர் பெரியகோவில் முன்பு அனைவரும் கைகளில் தேசியக்கொடியை ஏந்தியபடி சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என சுதந்திர தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, பான் செக்கர்ஸ் கல்லூரி இயக்குனர் டெரன்ஸியா மேரி, கல்லூரி முதல்வர் காயத்ரி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தழகி, செஞ்சிலுவை சங்க பொருளாளர் முத்துக்குமார் மற்றும் மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்