குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
சோளிங்கரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் எஸ்.கே.வி. தனியார் பள்ளி சார்பில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை பாலியல் சீண்டல், போதைப் பொருட்கள் தடுத்தல் மற்றும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி நிறுவனரும், சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவருமான கலைக்குமார் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைவர் கவிதா கலைக்குமார், சோளிங்கர் நகரமன்ற உறுப்பினர்கள் டி.கோபால், எஸ்.அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம் போஸ்ட் ஆபீஸ் தெரு, சுப்பாராவ் தெரு, அண்ணா சிலை வழியாக பஸ் நிலையம் வரை சென்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் சீண்டல், பெண் கல்வி அவசியம் குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் போலீஸ் சப்-இன்ஸபெக்டர் மோகன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.