மயிலாடுதுறையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தொடங்கி வைத்தார்.;
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன்பு ஊர்வலம் தொடங்கியது. இதை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் கொடியசைத்து, தொடங்கி வைத்தார். கூறைநாடு, காந்திஜி சாலை, பஸ்நிலையம் வழியாக சென்று மணிக்கூண்டு அருகில் ஊர்வலம் நிறைவடைந்தது.
மாணவ-மாணவிகள் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், 'மதுவினால் குடும்பத்தில் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சினைகளையும் மக்கள் எதிர்கொள்கின்றனர்.
விடுபட வேண்டும்
எனவேதான் மது பழக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
மது ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த ஒரு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்துள்ளது' என்றார்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார், கல்லூரி, பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.