கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான்

கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.;

Update: 2023-09-11 19:14 GMT

பொதுமக்களிடையே விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எச்.ஐ.வி. குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான 'ரெட்ரன்' என்ற தலைப்பில் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு மாரத்தான் ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே தனித்தனியாக புறப்பட்ட மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி இலக்கை நோக்கி ஓடினர். மாரத்தான் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, கடைவீதி, அரசு மருத்துவமனை வழியாக சென்று துறையூர் சாலையில் உள்ள பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயில் அருகே முடிவடைந்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாரத்தான் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.7 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.1,000-ம் அவரவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. அவர்களுக்கு சான்றிதழ்களை கலெக்டர் கற்பகம் வழங்கி பாராட்டினார். இதில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்