விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

ஹெல்மெட், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது

Update: 2022-08-12 17:02 GMT

மயிலாடுதுறையில் மாவட்ட காவல்துறை, சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் சேவை சங்கங்கள் சார்பில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வலியுறுத்தியும், போதை ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். தரங்கம்பாடி சாலையில், தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக 5 கி.மீ. தூரம் சென்று ரயிலடி கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர், சிறுமிகள் முதல் 70 வயது முதியவர் வரை பங்கேற்றனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் 400 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே, மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும். போதை பொருட்களை ஒழித்துக்கட்ட மாணவர் சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இதில், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், உணவு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செந்தில்வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







Tags:    

மேலும் செய்திகள்