கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்-பொதுமக்களுக்கு, கலெக்டர் கார்மேகம் அறிவுரை

சேலம் மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2023-04-18 21:14 GMT

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை வெயில்

கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அவசிய காரணங்கள் தவிர நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அவசிய காரணங்களால் வெளியே செல்லும் பயணத்தின் போது குடிநீர் பாட்டில் எடுத்து செல்ல வேண்டும்.

தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

சற்று ஓய்வு எடுக்கலாம்

திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும்போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்து கொள்ளலாம். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்கு செல்லலாம்.

மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் 108 ஆம்புலன்சை மருத்துவ உதவிக்கு அழைக்கலாம்.

நீர் பருக வேண்டும்

கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் பருகுவதை தவிர்க்கவும். அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக்கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பருகலாம். குறிப்பாக, கோடைகாலத்தில் குளிர்ந்த நீரால் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.

சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகள் ஆகியவற்றை திரைச்சீலைகளால் மூட வேண்டும். இரவு நேரங்களில் குளிர்ந்த காற்று வருமாறு ஜன்னல்களை திறந்து வைத்து கொள்ளலாம். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்க கூடாது.

குறிப்பாக, மது அருந்துதல் மற்றும் கியாஸ் நிரப்பப்பட்ட குளிர் பானங்களை அருந்துதல், அளவுக்கு அதிகமான தேனீர் மற்றும் காபி அருந்துதல், அதிக அளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவதை தவிர்த்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்