அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: விஜய் 28 காளைகள் பிடித்து முதலிடம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விஜய் 28 காளைகள் பிடித்து முதலிடம் பிடித்தார்;

Update: 2023-01-15 11:29 GMT

மதுரை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் மிக உற்சாகமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்துள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 4 மணியளவில் நிறைவடைந்ததுள்ளது.

இதனிடையே அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட நிலையில் அதனை மாடுபிடி வீரர் விஜய் லாவகமாக அடக்கினார். இதையடுத்து ஜல்லிக்கட்டு விழா குழு சார்பாக அவருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அந்த பரிசுகளை பெற்ற வீரர் விஜய், ஏமாற்றத்துடன் தனது காளையை கயிறு போட்டு பிடித்துச் செல்ல முயன்ற பள்ளி மாணவி அழகுபேச்சியிடம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இது போல் செய்ய வேண்டும் என்ற மனசு எத்தனை பேருக்கு வரும் என்றும் தெரியாது. கிடைத்த வரை லாபம் எனக் கருதும் இந்தக் காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட பரிசை காளையின் உரிமையாளருக்கே வழங்கி கவனம் ஈர்த்திருக்கிறார் மாடுபிடி வீரர் விஜய்.

மாடுபிடி வீரர் விஜய் மின் வாரியத்தில் ஹேங் மேனாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 28 காளைகளை அடக்கி களத்தில் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள விஜய், ஜல்லிக்கட்டு வளர்ப்போரை ஊக்கப்படுத்தும் விதமாக தனக்கு தரப்பட்ட அண்டா, குண்டா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை எந்தக் காளையை தாம் அடக்கினோரோ அந்த காளையின் உரிமையாளருக்கே வழங்கினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் 28 காளைகள் பிடித்து தொடர்ந்து முதலிடம்.

அவனியாபுரம் கார்த்தி 17 காளைகள் பிடித்து 2வது இடம். விளாங்குடி பாலாஜி 14 காளைகள் பிடித்து 3வது பிடித்தார்

அமைச்சர் மூர்த்தி சிறந்தமாடுபிடி வீரர் என்ற அடிப்படையில் விஜய்க்கு இன்று தங்கக்காசுகளை பரிசாக வழங்கினார். எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்ததால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்