கடையநல்லூரில் 2 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்

கடையநல்லூரில் 2 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-05 19:00 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் 2 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தொடங்கி வைத்தார்.

தானியங்கி போக்குவரத்து சிக்னல்

கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மற்றும் கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சாலையில் பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமை தாங்கி, தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை திறந்து இயக்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

விதிமீறலுக்கு அபராதம்

கடையநல்லூரில் 2 இடங்களில் அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் குறித்து கடையநல்லூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும். மேலும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்களது செல்போனுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

ஐ.டி.எம்.எஸ். தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்த தானியங்கி சிக்னல்களில் உள்ள கேமராக்களில், ஏற்கெனவே குற்றவழக்குகளில் ஈடுபட்ட வாகனங்கள், திருட்டு வாகனங்கள் குறித்து ஒப்பீடு செய்து அதுகுறித்த எச்சரிக்கை செய்தியையும் போலீசாருக்கும் அனுப்பி வைக்கும். இந்த தொழில்நுட்பத்துடன் போக்குவரத்து துறையின் பரிவாகன் தளமும் இணைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் குறித்த விபரங்களை விரைவாக போலீசார் தெரிந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் போலீஸ் உள்கோட்டத்தில் 2 இடங்களில் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் தானியங்கி கேமராக்கள் தேவைப்படும் இடங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, தென்காசி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, கிருஷ்ணன், தொழிலதிபர்கள் அமானுல்லா, செல்வம், ரவிச்சந்திரன், பகதூர்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்