புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் ரூ.150 கோடியில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்கள் - மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்களை ரூ.150 கோடியில் அமைக்க திட்டமிட்டு உள்ளது.;

Update: 2023-09-12 02:29 GMT

சென்னையில் 2-ம் கட்டமாக 118 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் கட்டப்படும் புதிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தானியங்கி மூலம் டிக்கெட் வழங்கும் வாசல்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கு ரூ.150 கோடி வரை தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கடனாக பெற நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் 2-ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதிக்கு தானியங்கி கட்டண வசூல் வாசல்கள் அல்லது டிக்கெட் வாசல்கள் (கேட்கள்) நிறுவுவதற்கு நிதி தேவைப்படுகிறது.

குறிப்பாக டிக்கெட் கேட்களை அமைக்க ரூ.150 கோடி வரை கடன் பெற திட்டமிடப்பட்டு உள்ளது. கோயம்பேட்டில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் 5-ன் ஒரு பகுதி மற்றும் சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வழித்தடம் 3-ன் ஒரு பகுதி வரை இந்த வாசல்களை அமைப்பதற்கு நிதி தேவைப்படுகிறது.

பொது- தனியார் கூட்டாண்மை மாதிரியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் மற்றும் தானியங்கி டிக்கெட் வழங்கும் வாசல்களை அமைக்க முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மற்ற நகரங்களின் மெட்ரோ ரெயில் அமைப்புகளை ஆய்வு செய்த பிறகு பொது- தனியார் கூட்டாண்மை என்பது சாத்தியமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த யோசனையை கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

2-ம் கட்ட திட்டத்துக்காக மதிப்பிடப்பட்ட செலவு ரூ.61 ஆயிரத்து 843 கோடியாகும், இதில், மாநில அரசு நிதி தவிர, ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ரூ.20 ஆயிரத்து 196 கோடி வழங்குகிறது. இதுதவிர ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட வங்கிகளின் நிதி உதவியும் கிடைக்க இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்