ஆட்டோ கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

ஆட்டோ கட்டணத்தை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-08-16 13:43 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்ய தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொதுமக்களுக்கான பொது போக்குவரத்தில் பஸ், ரெயில் சேவைகளுக்கு அடுத்தபடியாக தினசரி பெரும்பங்காற்றி வரும் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு குறைந்தபட்ச தூரமான 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ.12, காத்திருப்பு கட்டணம் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50 என நிர்ணயம் செய்தது.

தற்போது பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட வாகன எரிபொருட்களின் விலை உயர்வால் ஆட்டோ ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பெட்ரோல், டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அளித்த உத்தரவை இனியும் காலதாமதம் செய்யாமல் அமல்படுத்த வேண்டும்.

மேலும் ஆட்டோ கட்டணத்தில் குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கிலோமீட்டருக்கு ரூ.50-ம், அதற்குப் பிறகான ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.20-ம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கான காத்திருப்பு கட்டணத்தை ரூ.5 ஆகவும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்