வெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர்-தொழிலாளி பலி

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில், ஆட்டோ டிரைவர், தொழிலாளி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-04-19 20:41 GMT

முக்கூடல்:

சேரன்மாதேவியை சேர்ந்தவர் அருணாசலம். ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் முக்கூடலை சேர்ந்த மனோன்மணி மற்றும் சாந்தி ஆகிய 2 பெண்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முக்கூடலுக்கு சென்று கொண்டிருந்தார். அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகே சென்றபோது ரோட்டின் ஓரமாக இருந்த மணல்மேட்டின் மீது ஏறி இறங்கியதில் ஆட்டோ எதிர்பாராதவிதமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அருணாசலம் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் பயணித்த மனோன்மணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அருணாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மனோன்மணியும் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு பெண் சாந்தி காயமின்றி தப்பினார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் மகன் நாக அர்ஜூன் (28). தொழிலாளி. இவர் நேற்று மாலை ஏர்வாடிக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தளவாய்புரம் காலனி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி, பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டியின் மீது மோதியது.

இந்த விபத்தில் நாக அர்ஜூன் படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் திருக்குறுங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்