பொட்டலம் போட்டு கஞ்சா விற்க முயற்சி;பெண் உள்பட 7 பேர் கைது

ராமநாதபுரம் அருகே காட்டுப்பகுதியில் கஞ்சாவை பொட்டலமாக போட்டு விற்பனை செய்ய முயன்ற பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-08-06 18:45 GMT

ராமநாதபுரம் அருகே காட்டுப்பகுதியில் கஞ்சாவை பொட்டலமாக போட்டு விற்பனை செய்ய முயன்ற பெண் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா பொட்டலம்

ராமநாதபுரம் நகர் புதுஅக்ரஹாரம் ரோடு பகுதியில் உள்ள கருவேல மர காட்டு பகுதியில் சிலர் கஞ்சா விற்பனைக்காக கூட்டு சேர்ந்து காத்திருப்பதாக பஜார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு மறைந்திருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு சிலர் கஞ்சாவை வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நோக்கில் கஞ்சாவை பொட்டலம் போட தயாராகி இருந்தது தெரியவந்தது.

இவர்கள் சுமார் 2 கிலோ கஞ்சாவை பாலிதீன் பையில் கொண்டு வந்து கொட்டி சிறுசிறு பொட்டலங்களாக போட்டுக்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

7 பேர் கைது

அதில் அவர்கள் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பழனிக்குமார் என்ற அய்யா பழனி(வயது 26), கார்த்திக்(26), தேவிபட்டினம் இலந்தைகூட்டம் ராஜாகோட்சா(25), சித்தார்கோட்டை வாழூர்ரோடு முகம்மது நியாசின்(27), பெருங்குளம் குகன்குணா (23), கவிதைக்குடி ஸ்ரீகாந்த் சுருளி(23), ராமநாதபுரம் கொத்ததெரு ராஜ்குமார் என்ற கொக்கிகுமார் மனைவி பவித்ரா(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பவித்ரா என்பவர் ராமநாதபுரம் கோர்ட்டில் ஜாமீன் கையெழுத்திட வந்த அசோக்குமார் என்பவரை கத்தியால் வெட்டிய கொக்கிகுமாரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்