நடந்து சென்ற இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி: வாலிபருக்கு அடி, உதை

வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-23 05:29 GMT

ஈரோடு,

ஈரோடு ரங்கம்பாளையத்தில் இருந்து ரெயில் நகர் செல்லும் வழியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரோட்டில் ரெயில் நகர், ஜீவா நகர், அண்ணாநகர், ரங்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு 8.15 மணியளவில் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த 25 வயது வாலிபர் திடீரென அந்த இளம்பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

இதனால் அந்த இளம்பெண் பயந்து அலறி கூச்சலிட்டார். அதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் இருந்த அந்த வாலிபர், 'தான் யாரிடமும் தவறாக நடக்கவில்லை என்றும், உறவினர் வீட்டு இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு வந்ததாகவும்' கூறினார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் நடந்த விவரங்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ரெயில்வே நுழைவு பாலம் பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு மது அருந்துவதற்கு பலர் வந்து செல்வதால் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அங்கு தெருவிளக்குகள் அமைத்து, அங்குள்ள புதர்களை அகற்ற வேண்டும். மேலும் மதுகுடிக்க வருபவர்களையும் போலீசார் துரத்த வேண்டும்' என்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்