ரெயில் மறியலுக்கு முயற்சி; 200 பேர் கைது

நாங்குநேரியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-04-15 21:21 GMT

நாங்குநேரி:

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாங்குநேரியில் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக ரெயில் நிலையம் முன்பு முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அவர்கள் ரெயில் நிலையம் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. உடனே அவர்கள், நாங்கள் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக்கொண்டு தான் உள்ளே செல்வோம். இதை யாரும் தடுக்க முடியாது என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பயணிகள் தங்கும் அறையில் அனைவரும் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நாகர்கோவிலில் இருந்து கச்சுகுடா செல்லும் ரெயிலில் வந்த ஆனைகுடியைச் சேர்ந்த ஜெயப்பாண்டி என்பவர் ரெயில் நாங்குநேரி ரெயில் நிலையம் அருகில் வந்தபோது அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் நின்றதும் அவர் கீழே இறங்கி, தண்டவாளத்தில் நடந்து வந்தவாறு ராகுல்காந்திக்கு ஆதரவாக கோஷமிட்டபடி வந்தார். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், வள்ளியூர் யூனியன் துணைத்தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 23 பெண்களும் அடங்குவர். கைதான அனைவரும் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்